Saturday, June 18, 2005

என்னவள் அழகானவள் !!

அன்னம்தான், கொஞ்சம் காட்டாறு நடையவளுக்கு.
மீன்தான், கொஞ்சம் கோணல் கண்ணவளுக்கு.
முத்துக்கள்தான், கொஞ்சம் முன்பின்னான பல்லவளுக்கு.
ஒவியம்தான், கொஞ்சம் கரிய நிறமவளுக்கு.
சிலைதான், கொஞ்சம் நெளிந்த வடிவவளுக்கு.
அழகு நிறந்தரமில்லாதது !

தென்றல்தான், கொஞ்சம் புயலின் குணமவளுக்கு.
இன்னிசைதான், கொஞ்சம் இடியின் குரலவளுக்கு.
தேன்தான், கொஞ்சம் கூரான நா அவளுக்கு.
பூதான், கொஞ்சம் முரடான கையவளுக்கு.
அன்பும் பண்புமே அழிவில்லாதது !

அதனால்தான் என்னவள் அழகானவள் !!

Tuesday, March 15, 2005

ஆலம் விதை

ஆலம் விதை போல் என் காதல்..
அதை மூடியிருக்கும் மண்போல் என் மனம்..
முன்னனுபவமாய் மனத்தின்மேலிருக்கும் தழும்பு..

விதைக்கு விடுதலைக் கொடுத்து,
மண்ணைப் பிளக்கவிட்டு,
ஆலமரத்தை வளரவிட பயமாயிருக்கு !

இன்னுமொரு தழும்பை என் மனம் தாங்காது.. அதனால் !!

என் உயிரை மதிக்கிறேன்

என் கண்களை மதிக்கிறேன்,
உன்னைப் பார்க்கமுடிவதனால்.

என் கால்களை மதிக்கிறேன்,
உன்னருகில் வரமுடிவதனால்.

என் கைகளை மதிக்கிறேன்,
உன் விரல் தொடமுடிவதனால்.

என் நாவை மதிக்கிறேன்,
உன்னோடு பேசமுடிவதனால்.

என் உயிரை மதிக்கிறேன்,
அன்பே, உன்னோடு வாழமுடிவதனால் !!


கடல்களையும், மலைகளையும் உனைப்பாட அழைத்திருக்கலாம்..
அன்பே, அவை என் உணர்வரியுமா ?

அருவிகளையும், ஆறுகளையும் உனைப்பாட அழைத்திருக்கலாம்..
அன்பே, அவை உன்னையரியுமா ?

என் கை கால்களை அழைத்ததேனென்றா கேட்கிறாய் ?
அவைகள் என் உணர்வரிந்தவை !
உண்மையில், உன்னையரிந்தவை !!

Monday, November 15, 2004

தீபாவளி - அன்றும் இன்றும்

தீபாவளிய்ன் எதிர்பார்ப்பு நினைவில் இருக்கு
அது தீபாவளியைவிட் இனிமையாயிருந்தது.

அம்மா செஞ்ச அதிரசம் நினைவில் இருக்கு
அது அகர்வால் ஸ்வீட்ஸைவிட ருசியாயிருந்தது.

ஏழை நண்பனுக்கு லெட்சுமி வெடி கொடுத்தது நினைவில் இருக்கு
அது ஆயிரம்வாலாவை தனியாய் வெடிப்பதைவிட உன்னதமாயிருந்தது.

நண்பர்களுடன் சுற்றித்திரிந்து இனிப்புகளை பகிர்ந்தது நினைவில் இருக்கு
அது நடிகர் நடிகையின் சிற்ப்புப்பேட்டியைக் காண்பதைவிட சிறந்ததாயிருந்தது.

ஊருக்குச்சென்று தாத்தா பாட்டியின் காலில் விழுந்து வணங்கியது நினைவில் இருக்கு
அது இந்தியத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாகக் காட்டப்படும் படத்தைப்பார்பதைவிட மேலாயிருந்தது.

வாழ்க்கைப் பயணம் திசைமாறிவிட்டதா?
இல்லை. இல்லை. துடுப்பு நம் கையில்தானுள்ளது.

இந்தத் தீபாவளியிலாவது நினைவில் இருப்பதை நிஜமாக்குவோம் !!

நான் செய்தவை :- பாகம் ஒன்று

LKG -
பள்ளியை விட்டு ஆசிரியருக்குத் தெரியாமல் வீட்டுக்கு ஓடி வந்தேன். மறுபடியும் என் பெற்றோர் என்னைக் கூட்டிச்சென்று விட்டதனால்தான் நானே இன்று நான்.


UKG -
பெரியார் மணியம்மைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, என் எதிரியை வயிற்றில் கடித்தேன். HM என்னை உடனே வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். என் பெற்றோர் சென்று மன்னிப்புக் கேட்டப்பிறகே HM என்னை மன்னித்தார்.


2nd std -
எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சின்மயா பள்ளியில் சேர்த்தார்கள். மதிய உணவிற்குப்பிறகு, A செக்ஷனும் B செக்ஷனும் போர் புரியும். அந்தப் போரில் வீரனாய் சண்டைப்போடும் பொழுது, பள்ளி செப்டிக்டாங்கின் கம்பியில் மாட்டி விழுந்து, அடிப்பட்டதில் உண்டான காயம் தான், இன்று என் பாஸ்போர்ட்டில் உள்ள ஒரு அங்க அடையாளம்.
விழாதிருந்தால் எனக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் இருந்திருக்குமோ என்னமோ?

மாறு வேசப் போட்டியில், " காப்பின்னா நரசூஸ் காப்பிதான், பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கே " ன்னுச்சொல்லும் உசிலமணி வேசம் போட்டேன்.


3rd std -
முதன் முதலில் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். மாணவர்கள் கிண்டல் செய்யாதிருந்தால் இன்று நான் அதை அணிந்துக்கொண்டிருக்க மாட்டேன்.

ஜுலியர் சீஸர் நாடக்கத்தில், ப்ரூட்டஸ் வேசம் போட்டு நடித்தேன். சீஸரை நான் கத்தியால் குத்தியவுடனே அவன் என்னைப்பார்த்து "யூ டூ ப்ரூட்டஸ்"ன்னுச் சொன்னது இன்னும் என்
காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.


4th std -
உமா மிஸ், என் கணித ஆசிரியை. மாணவர்களிடம் வாய்பாடுகளைக் கேட்டு, தவறாகச் சொன்னால் மானாவாறியாக பெரம்பில் பிண்ணியெடுத்துக் கொண்டிருந்தார். முதன்
முதலில் பயத்தால், எனக்கு இன்றும் வரமறுக்கின்ற 13ம் வாய்பாட்டை கையில் எழுதிக் கொண்டு மிஸிடம் சென்றேன். அதுவே என் முதலும் கடைசியுமாகிய பள்ளிப் பருவ
"பிட்டடிக்கும்" தவறு.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று "வாமனாவதாரம்". அந்தக் கதையை நாடக வடிவமாக்கி, அதில் என்னை மகாபலியாக்கிவிட்டார்கள். கிளைமாக்ஸில், வாமனனனாக நடித்தவன் மெதுவாக அவன் காலைத்தூக்கி என் தலையில் வைக்காமல், வேகமாக வைத்தான். இன்றும் அந்த நிகழ்ச்சியும் கூடவே வலியும் என் மனதில் பசுமையாக இருக்கின்றது.


5th std -
நான் தான் பள்ளியின் SPL (School People Leader). ஒவ்வொரு அசெம்ப்ளிக்கும் "ஸ்கூல் அட்டென்ஸென். ஸ்கூல் ஸ்டென்ட்டடீஸ்" என்று மூன்று முறை கூறும் பொழுதும், பள்ளி முழுவதும் அதைக்கேட்டு நடக்கும் பொழுதும், மனதிற்குள் ஒரு சந்தோஷம் தான்.

"என்றும் மார்க்கண்டேயன்" நாடக்கத்தில் நான் தான் எமன் வேடம் போட்டவன். அடப்பாவிகளா, நான் மண்ணின் நிறமாதலால், எல்லா நாடகத்திலும் வில்லன் தானா?


6th std -
செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல் நிலைப்பள்ளியில் பயின்றேன். நான் எப்பொழுதும் இரண்டாம் ரான்க்தான். என் நண்பன் முத்துராம் என்பவன்தான் முதல் ரான்க். ஒவ்வொரு விளையாட்டு வகுப்பிற்கும், மாணவர்கள் க்யூவில்தான் செல்லவேண்டும். அப்படி ஒரு நாள் சென்றுகொண்டிருந்த பொழுது, நானும் அவனும், க்யூவைவிட்டு விலகி கேண்டீனுக்குச்சென்று சமோசா வாங்கிச்சாப்பிட்டோம். இதை எங்கள் வகுப்பாசிரியைப் பார்த்துவிட்டார் என்பது எங்களுக்குத்தெரியாது. விளையாட்டு நேரம் முடிந்தபின், எங்கள் வகுப்பிற்கு திரும்பினோம். வகுப்பாசிரியை எங்களை கூப்பிட்டார். பிரம்படி பின்னியெடுக்கும் என்பார்களே. அதை அன்றுதான் உணர்ந்தேன்.

மனதை பாதித்த நிகழ்ச்சி ஒன்று அந்த பள்ளியில் தினமும் நடந்தது. மதிய உணவு வேலையில், மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்துச்சாப்பிட்டுவிட்டு மிச்ச உணவை கீழே
கொட்டுவார்கள். அதை கீழே கொட்ட வேண்டாம், என் டப்பாவில் போடுங்களென்று தன் பழைய தகர டப்பாவை நீட்டிக்கொண்டு மனநிலை பாதித்த ஒருவன் சுற்றித்திரிவான்.
அவனைப்பார்க்கும் போதெல்லாம் மனம் ஏனோ வருத்தத்தில் முழுகும்.


7th std -
R.S.K மேல் நிலைப்பள்ளிக்கு மாறினேன். வகுப்பின் முதல் நாள். பென்ச்சு ஒன்றில் பயத்துடன் உட்கார்ந்திருந்தேன். எந்தப்பள்ளியிலும், வகுப்புகளில், அதன் பழைய மாணவர்களின் கை ஓங்கியிருக்கும். அவ்வாறே அங்கு அன்றிருந்ததது. எனக்கோ நான் ஒரு புது மாணவன், கருப்பாய் இருக்கிறேன், குண்டாய்யிருக்கிறேன் என்றெல்லாம் எண்ணங்கள் நொடிக்கு நூறாய் ஓடிக்கொண்டிருந்தது. வகுப்பாசிரியை உள்ளே நுழைந்து, அட்டண்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார். மெதுவாக எங்கிருந்தோ பேச்சுச்சத்தம் கேட்க்க ஆரம்பித்தது. ஆசிரியை நிமிர்ந்துப்பார்த்து, "வூ ஸ் தி ப்ளாக் க்ஷ£ப்" என்று கேட்க்க, நானோ கருப்பாயிருக்கும் என்னைத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து எழுந்து நிற்க, வகுப்பே சிரிப்பில் முழுகியது. ஆசிரியை சிரித்தாரா என்று நான் பார்த்த ஞாபகமில்லை. நான் மனதினுள் அழுதேன்.

Sunday, May 16, 2004

மாற்றம்
நான் கவிஞனல்ல. நான் எழுதுவது கவிதையுமல்ல!

எண்ணங்களென்னும் நூல் எடுத்து, மொழி என்னும் நிறம் பூசி, எழுத்தாற்றலென்னும் இயந்திரம் கொண்டு, கவிஞனென்னும் படைப்பாளியால் பிணையப்படும் ஓர் அழகிய ஆடையே கவிதை. சிலர் இல்லாத ஒன்றை ஆடை என்று கூறி பொருள் ஈட்டுகிறார்கள். சிலரோ ஆடையையே ஆடை என்று கூறி நம்பவைக்கமுடியாமல் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகையைச்சேர்ந்தவன்.

கவிதை என்றால் படிப்பவரின் ஆழ்மனதை ஒரு நீண்ட கோல் கொண்டு கிளரிவிட வேண்டும். உள்ளிருக்கும் மனிதம் என்னும் முத்தை வெளிக்கொணரவேண்டும். அப்படிப்பட்டக் கவிதை எழுத வேண்டுமென்பது மலரத்துடிக்கும் புரட்சிக்கவிஞனான என் ஆசை. கவிதைகள் பல எழுதினேன். பத்திரிக்கைகளின் முன் வைத்தேன். அழகிய கவி ஆடைகள் அவை. அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டாம்.கட்டிக்கொள்ளவும் வேண்டாம். கிழித்தெரியாமல் இருந்திருக்கலாம். வயிற்றுக்கு உணவில்லையென்றாலும் மனதிற்கிருந்தால் போதுமென்றிருந்தேன். கவிதையைக்கொண்டு மறுமலர்ச்சிப்பாதையில் மனிதனைச்செலுத்த நினைத்தேன்.

என் கவிதைகளுக்கு இடம் தேடிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள், கவிதைகள் உறங்கிக்கொண்டிருந்தப் புத்தகங்களை சுமந்து கொண்டு நடந்து நடந்து முக்காலே அரைக்கால் அங்குலம் குறைந்திருந்தேன். உயரத்தில் அல்ல. வயிற்றில். சூரியனுக்குத் தெரியுமா என் வலி. கதிரின் தாக்கம் தலையில் நுழைந்து தொப்புள் வழியே வெளிவந்தது. என் கூரை மாளிகைக்குள் தட்டுத்தடுமாறி நுழைவதற்குள் பாதி இரத்தம் சுண்டிவிட்டது.

சாமி இந்த் வெயில் தாக்கத்தை கொஞ்சம் தணிக்கக்கூடாதா. காலியாய் இருந்த பானையை கவிழ்த்து தனிக்காட்டு அரசனாய் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தேன். ஒரு கவிதை மெல்ல மெல்ல மன நரம்பின் வேரிலிருந்து மேலேறிக்கொண்டிருந்தது. இதோ இப்படி உயிரெடுத்தது ...

"காத்திருந்து கவிபாட குயில்கள் தயார் !
இரசித்திருந்து நடனமாட மயில்கள் தயார் !
நிறைந்திருந்து ஓடியாட நதிகள் தயார் !
நனைந்திருந்து நஞ்சையாக நிலங்கள் தயார் !
பூத்திருந்து புன்னகைக்க பூக்கள் தயார் !
சேர்த்திருந்ததை செலவழிக்க எறும்புகள் தயார் !
நினைத்து நினைத்திருந்து மனமகிழ நானும் தயார் !
மழையே, மேகச்சிறையிலிருந்து தப்பிக்க நீ தயாரா?"


கவிதை அருகிலிருந்த என் புத்தகத்தில் பதிவானது. அதற்கு உருவம் கிடைத்தது. புத்தகமும் மகிழ்ந்தது. வைரமுத்துவின் கவித்தூள் ஒன்றரை சிட்டிகையும், இளையராஜாவின் இசைச்சக்கரை இரண்டு சிட்டிகையும், சாதனா சர்கத்தின் குரல் பால் இருநூறு மில்லியும் கலந்த இனிய குழம்பியை மனதில் குடித்தேன். பாய் விரித்துப்படுத்தேன்.

எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஆனால் வானத்து மேகங்கள் வாய் திறந்தபொழுது விழித்தேன். மழை பாடியது. இடி இசைத்தது. மின்னல் ஆடியது. நான் கவிதை எழுதியது அமிர்தவர்ஷினி ராகத்திலோ? கால் கட்டை விரல் நனையுமாறு கூரையின் சந்து வழியே ஒரு சொட்டு விழுந்தது. ஓ! மேகத்திற்கு என் ஆசி வேண்டுமா? வாழ்க பல்லாண்டு. வாஸ்து பார்த்திருந்தால் கூரை ஒழுகியிருக்காதோ என்னவோ? கட்டை விரல் தொடங்கி முழங்கால் வரை சாரலினால்
நனைந்தேன். சற்று நேரத்தில் சட்டிப்பானைகளில் இருப்பது போல் வீட்டுத்தரையின் குண்டுக்குழிகளில் நீர் தேங்கியிருந்தது.
நன்றி கடவுளே. ஒரு பைசா செலவில்லாமல் என் வீட்டுக்கொரு மழைநீர் சேகரிப்புத்திட்டம்.

ஓடின. ஓடின. நொடிகள் ஓடின. நிமிடங்கள் ஓடின. வாரங்கள் ஓடின. மாதங்கள் ஓடின. ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன். என் வயதும் ஓடியது. நானும் ஒரு மனிதன். மனிதனின் பொறுமையின் எல்லைக்கோடு என் கண்முன் நிழலாடியது. இறுதியில் சாய்ந்தேன். கொள்கைத் தடுமாறியது. ஒரு முடித்திருத்தகத்தில் பணியாளாய் அமர்ந்தேன். வேலையில் ஏற்றத்தாழ்வினை பார்க்கக்கூடாதென்பது என் கொள்கையின் ஒரு கூறு. வேறு வழியுமில்லை. தொழிலார்வம் வளரத்தொடங்கியது. கவியார்வம் குறையத்தொடங்கியது. என் கவிதைப் புத்தகத்தின் பக்கங்கள் நிறைவதற்கு தாமதமாகியது. அதிலும் வறட்சியா? மனமென்னும் கிணற்றில் சிந்தனை ஊற்று வற்றும் பொழுது, கவிதை நீர் குறையத்தானேச்செய்யும் !

இப்பொழுது வயிறு நிறைந்திருக்கிறது. மனம் நிறையவில்லை. ஏன் என்றா கேட்கிறீர்கள்? என்னால் கடைக்கு வருபவர்களின் தலையில் இருக்கும் முடியைத்தான் திருத்தமுடிந்தது. சிந்தனையை அல்ல. சரி போகட்டும். உலகம் எனக்கு முன்னால் கோடானக்கோடிப்பேரை பார்த்திருக்கின்றது. எனக்குப்பின்னாலும் பார்க்கும். அதற்குத்தெரியும், எதிலும் சரியான அளவு எவ்வளவென்று!!