Sunday, May 16, 2004

மாற்றம்
நான் கவிஞனல்ல. நான் எழுதுவது கவிதையுமல்ல!

எண்ணங்களென்னும் நூல் எடுத்து, மொழி என்னும் நிறம் பூசி, எழுத்தாற்றலென்னும் இயந்திரம் கொண்டு, கவிஞனென்னும் படைப்பாளியால் பிணையப்படும் ஓர் அழகிய ஆடையே கவிதை. சிலர் இல்லாத ஒன்றை ஆடை என்று கூறி பொருள் ஈட்டுகிறார்கள். சிலரோ ஆடையையே ஆடை என்று கூறி நம்பவைக்கமுடியாமல் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகையைச்சேர்ந்தவன்.

கவிதை என்றால் படிப்பவரின் ஆழ்மனதை ஒரு நீண்ட கோல் கொண்டு கிளரிவிட வேண்டும். உள்ளிருக்கும் மனிதம் என்னும் முத்தை வெளிக்கொணரவேண்டும். அப்படிப்பட்டக் கவிதை எழுத வேண்டுமென்பது மலரத்துடிக்கும் புரட்சிக்கவிஞனான என் ஆசை. கவிதைகள் பல எழுதினேன். பத்திரிக்கைகளின் முன் வைத்தேன். அழகிய கவி ஆடைகள் அவை. அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டாம்.கட்டிக்கொள்ளவும் வேண்டாம். கிழித்தெரியாமல் இருந்திருக்கலாம். வயிற்றுக்கு உணவில்லையென்றாலும் மனதிற்கிருந்தால் போதுமென்றிருந்தேன். கவிதையைக்கொண்டு மறுமலர்ச்சிப்பாதையில் மனிதனைச்செலுத்த நினைத்தேன்.

என் கவிதைகளுக்கு இடம் தேடிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள், கவிதைகள் உறங்கிக்கொண்டிருந்தப் புத்தகங்களை சுமந்து கொண்டு நடந்து நடந்து முக்காலே அரைக்கால் அங்குலம் குறைந்திருந்தேன். உயரத்தில் அல்ல. வயிற்றில். சூரியனுக்குத் தெரியுமா என் வலி. கதிரின் தாக்கம் தலையில் நுழைந்து தொப்புள் வழியே வெளிவந்தது. என் கூரை மாளிகைக்குள் தட்டுத்தடுமாறி நுழைவதற்குள் பாதி இரத்தம் சுண்டிவிட்டது.

சாமி இந்த் வெயில் தாக்கத்தை கொஞ்சம் தணிக்கக்கூடாதா. காலியாய் இருந்த பானையை கவிழ்த்து தனிக்காட்டு அரசனாய் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தேன். ஒரு கவிதை மெல்ல மெல்ல மன நரம்பின் வேரிலிருந்து மேலேறிக்கொண்டிருந்தது. இதோ இப்படி உயிரெடுத்தது ...

"காத்திருந்து கவிபாட குயில்கள் தயார் !
இரசித்திருந்து நடனமாட மயில்கள் தயார் !
நிறைந்திருந்து ஓடியாட நதிகள் தயார் !
நனைந்திருந்து நஞ்சையாக நிலங்கள் தயார் !
பூத்திருந்து புன்னகைக்க பூக்கள் தயார் !
சேர்த்திருந்ததை செலவழிக்க எறும்புகள் தயார் !
நினைத்து நினைத்திருந்து மனமகிழ நானும் தயார் !
மழையே, மேகச்சிறையிலிருந்து தப்பிக்க நீ தயாரா?"


கவிதை அருகிலிருந்த என் புத்தகத்தில் பதிவானது. அதற்கு உருவம் கிடைத்தது. புத்தகமும் மகிழ்ந்தது. வைரமுத்துவின் கவித்தூள் ஒன்றரை சிட்டிகையும், இளையராஜாவின் இசைச்சக்கரை இரண்டு சிட்டிகையும், சாதனா சர்கத்தின் குரல் பால் இருநூறு மில்லியும் கலந்த இனிய குழம்பியை மனதில் குடித்தேன். பாய் விரித்துப்படுத்தேன்.

எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஆனால் வானத்து மேகங்கள் வாய் திறந்தபொழுது விழித்தேன். மழை பாடியது. இடி இசைத்தது. மின்னல் ஆடியது. நான் கவிதை எழுதியது அமிர்தவர்ஷினி ராகத்திலோ? கால் கட்டை விரல் நனையுமாறு கூரையின் சந்து வழியே ஒரு சொட்டு விழுந்தது. ஓ! மேகத்திற்கு என் ஆசி வேண்டுமா? வாழ்க பல்லாண்டு. வாஸ்து பார்த்திருந்தால் கூரை ஒழுகியிருக்காதோ என்னவோ? கட்டை விரல் தொடங்கி முழங்கால் வரை சாரலினால்
நனைந்தேன். சற்று நேரத்தில் சட்டிப்பானைகளில் இருப்பது போல் வீட்டுத்தரையின் குண்டுக்குழிகளில் நீர் தேங்கியிருந்தது.
நன்றி கடவுளே. ஒரு பைசா செலவில்லாமல் என் வீட்டுக்கொரு மழைநீர் சேகரிப்புத்திட்டம்.

ஓடின. ஓடின. நொடிகள் ஓடின. நிமிடங்கள் ஓடின. வாரங்கள் ஓடின. மாதங்கள் ஓடின. ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன். என் வயதும் ஓடியது. நானும் ஒரு மனிதன். மனிதனின் பொறுமையின் எல்லைக்கோடு என் கண்முன் நிழலாடியது. இறுதியில் சாய்ந்தேன். கொள்கைத் தடுமாறியது. ஒரு முடித்திருத்தகத்தில் பணியாளாய் அமர்ந்தேன். வேலையில் ஏற்றத்தாழ்வினை பார்க்கக்கூடாதென்பது என் கொள்கையின் ஒரு கூறு. வேறு வழியுமில்லை. தொழிலார்வம் வளரத்தொடங்கியது. கவியார்வம் குறையத்தொடங்கியது. என் கவிதைப் புத்தகத்தின் பக்கங்கள் நிறைவதற்கு தாமதமாகியது. அதிலும் வறட்சியா? மனமென்னும் கிணற்றில் சிந்தனை ஊற்று வற்றும் பொழுது, கவிதை நீர் குறையத்தானேச்செய்யும் !

இப்பொழுது வயிறு நிறைந்திருக்கிறது. மனம் நிறையவில்லை. ஏன் என்றா கேட்கிறீர்கள்? என்னால் கடைக்கு வருபவர்களின் தலையில் இருக்கும் முடியைத்தான் திருத்தமுடிந்தது. சிந்தனையை அல்ல. சரி போகட்டும். உலகம் எனக்கு முன்னால் கோடானக்கோடிப்பேரை பார்த்திருக்கின்றது. எனக்குப்பின்னாலும் பார்க்கும். அதற்குத்தெரியும், எதிலும் சரியான அளவு எவ்வளவென்று!!