Monday, November 15, 2004

தீபாவளி - அன்றும் இன்றும்

தீபாவளிய்ன் எதிர்பார்ப்பு நினைவில் இருக்கு
அது தீபாவளியைவிட் இனிமையாயிருந்தது.

அம்மா செஞ்ச அதிரசம் நினைவில் இருக்கு
அது அகர்வால் ஸ்வீட்ஸைவிட ருசியாயிருந்தது.

ஏழை நண்பனுக்கு லெட்சுமி வெடி கொடுத்தது நினைவில் இருக்கு
அது ஆயிரம்வாலாவை தனியாய் வெடிப்பதைவிட உன்னதமாயிருந்தது.

நண்பர்களுடன் சுற்றித்திரிந்து இனிப்புகளை பகிர்ந்தது நினைவில் இருக்கு
அது நடிகர் நடிகையின் சிற்ப்புப்பேட்டியைக் காண்பதைவிட சிறந்ததாயிருந்தது.

ஊருக்குச்சென்று தாத்தா பாட்டியின் காலில் விழுந்து வணங்கியது நினைவில் இருக்கு
அது இந்தியத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாகக் காட்டப்படும் படத்தைப்பார்பதைவிட மேலாயிருந்தது.

வாழ்க்கைப் பயணம் திசைமாறிவிட்டதா?
இல்லை. இல்லை. துடுப்பு நம் கையில்தானுள்ளது.

இந்தத் தீபாவளியிலாவது நினைவில் இருப்பதை நிஜமாக்குவோம் !!

நான் செய்தவை :- பாகம் ஒன்று

LKG -
பள்ளியை விட்டு ஆசிரியருக்குத் தெரியாமல் வீட்டுக்கு ஓடி வந்தேன். மறுபடியும் என் பெற்றோர் என்னைக் கூட்டிச்சென்று விட்டதனால்தான் நானே இன்று நான்.


UKG -
பெரியார் மணியம்மைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, என் எதிரியை வயிற்றில் கடித்தேன். HM என்னை உடனே வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். என் பெற்றோர் சென்று மன்னிப்புக் கேட்டப்பிறகே HM என்னை மன்னித்தார்.


2nd std -
எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சின்மயா பள்ளியில் சேர்த்தார்கள். மதிய உணவிற்குப்பிறகு, A செக்ஷனும் B செக்ஷனும் போர் புரியும். அந்தப் போரில் வீரனாய் சண்டைப்போடும் பொழுது, பள்ளி செப்டிக்டாங்கின் கம்பியில் மாட்டி விழுந்து, அடிப்பட்டதில் உண்டான காயம் தான், இன்று என் பாஸ்போர்ட்டில் உள்ள ஒரு அங்க அடையாளம்.
விழாதிருந்தால் எனக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் இருந்திருக்குமோ என்னமோ?

மாறு வேசப் போட்டியில், " காப்பின்னா நரசூஸ் காப்பிதான், பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கே " ன்னுச்சொல்லும் உசிலமணி வேசம் போட்டேன்.


3rd std -
முதன் முதலில் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். மாணவர்கள் கிண்டல் செய்யாதிருந்தால் இன்று நான் அதை அணிந்துக்கொண்டிருக்க மாட்டேன்.

ஜுலியர் சீஸர் நாடக்கத்தில், ப்ரூட்டஸ் வேசம் போட்டு நடித்தேன். சீஸரை நான் கத்தியால் குத்தியவுடனே அவன் என்னைப்பார்த்து "யூ டூ ப்ரூட்டஸ்"ன்னுச் சொன்னது இன்னும் என்
காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.


4th std -
உமா மிஸ், என் கணித ஆசிரியை. மாணவர்களிடம் வாய்பாடுகளைக் கேட்டு, தவறாகச் சொன்னால் மானாவாறியாக பெரம்பில் பிண்ணியெடுத்துக் கொண்டிருந்தார். முதன்
முதலில் பயத்தால், எனக்கு இன்றும் வரமறுக்கின்ற 13ம் வாய்பாட்டை கையில் எழுதிக் கொண்டு மிஸிடம் சென்றேன். அதுவே என் முதலும் கடைசியுமாகிய பள்ளிப் பருவ
"பிட்டடிக்கும்" தவறு.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று "வாமனாவதாரம்". அந்தக் கதையை நாடக வடிவமாக்கி, அதில் என்னை மகாபலியாக்கிவிட்டார்கள். கிளைமாக்ஸில், வாமனனனாக நடித்தவன் மெதுவாக அவன் காலைத்தூக்கி என் தலையில் வைக்காமல், வேகமாக வைத்தான். இன்றும் அந்த நிகழ்ச்சியும் கூடவே வலியும் என் மனதில் பசுமையாக இருக்கின்றது.


5th std -
நான் தான் பள்ளியின் SPL (School People Leader). ஒவ்வொரு அசெம்ப்ளிக்கும் "ஸ்கூல் அட்டென்ஸென். ஸ்கூல் ஸ்டென்ட்டடீஸ்" என்று மூன்று முறை கூறும் பொழுதும், பள்ளி முழுவதும் அதைக்கேட்டு நடக்கும் பொழுதும், மனதிற்குள் ஒரு சந்தோஷம் தான்.

"என்றும் மார்க்கண்டேயன்" நாடக்கத்தில் நான் தான் எமன் வேடம் போட்டவன். அடப்பாவிகளா, நான் மண்ணின் நிறமாதலால், எல்லா நாடகத்திலும் வில்லன் தானா?


6th std -
செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல் நிலைப்பள்ளியில் பயின்றேன். நான் எப்பொழுதும் இரண்டாம் ரான்க்தான். என் நண்பன் முத்துராம் என்பவன்தான் முதல் ரான்க். ஒவ்வொரு விளையாட்டு வகுப்பிற்கும், மாணவர்கள் க்யூவில்தான் செல்லவேண்டும். அப்படி ஒரு நாள் சென்றுகொண்டிருந்த பொழுது, நானும் அவனும், க்யூவைவிட்டு விலகி கேண்டீனுக்குச்சென்று சமோசா வாங்கிச்சாப்பிட்டோம். இதை எங்கள் வகுப்பாசிரியைப் பார்த்துவிட்டார் என்பது எங்களுக்குத்தெரியாது. விளையாட்டு நேரம் முடிந்தபின், எங்கள் வகுப்பிற்கு திரும்பினோம். வகுப்பாசிரியை எங்களை கூப்பிட்டார். பிரம்படி பின்னியெடுக்கும் என்பார்களே. அதை அன்றுதான் உணர்ந்தேன்.

மனதை பாதித்த நிகழ்ச்சி ஒன்று அந்த பள்ளியில் தினமும் நடந்தது. மதிய உணவு வேலையில், மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்துச்சாப்பிட்டுவிட்டு மிச்ச உணவை கீழே
கொட்டுவார்கள். அதை கீழே கொட்ட வேண்டாம், என் டப்பாவில் போடுங்களென்று தன் பழைய தகர டப்பாவை நீட்டிக்கொண்டு மனநிலை பாதித்த ஒருவன் சுற்றித்திரிவான்.
அவனைப்பார்க்கும் போதெல்லாம் மனம் ஏனோ வருத்தத்தில் முழுகும்.


7th std -
R.S.K மேல் நிலைப்பள்ளிக்கு மாறினேன். வகுப்பின் முதல் நாள். பென்ச்சு ஒன்றில் பயத்துடன் உட்கார்ந்திருந்தேன். எந்தப்பள்ளியிலும், வகுப்புகளில், அதன் பழைய மாணவர்களின் கை ஓங்கியிருக்கும். அவ்வாறே அங்கு அன்றிருந்ததது. எனக்கோ நான் ஒரு புது மாணவன், கருப்பாய் இருக்கிறேன், குண்டாய்யிருக்கிறேன் என்றெல்லாம் எண்ணங்கள் நொடிக்கு நூறாய் ஓடிக்கொண்டிருந்தது. வகுப்பாசிரியை உள்ளே நுழைந்து, அட்டண்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார். மெதுவாக எங்கிருந்தோ பேச்சுச்சத்தம் கேட்க்க ஆரம்பித்தது. ஆசிரியை நிமிர்ந்துப்பார்த்து, "வூ ஸ் தி ப்ளாக் க்ஷ£ப்" என்று கேட்க்க, நானோ கருப்பாயிருக்கும் என்னைத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து எழுந்து நிற்க, வகுப்பே சிரிப்பில் முழுகியது. ஆசிரியை சிரித்தாரா என்று நான் பார்த்த ஞாபகமில்லை. நான் மனதினுள் அழுதேன்.